மக்கள் விடுதலை இராணுவம் (PEOPLE’S LIBERATION ARMY-PLA) ஒரு அமைப்பு கிழக்கிலிருந்து போராடவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கோணோஸ் தெரிவித்துள்ளதாக பிரித்தானியாவின் தி ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் தேவைதானா? என மனதளவில் இருந்த கேள்வி தற்போது மனம்விட்டு பேசப்படுகின்ற நிலைமையை இச் செய்தி ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தமிழ் மக்கள் அனுபவித்த துன்பம் போதும் என்ற நிலையில் மக்கள் உள்ளனர் மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்திற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை என்பதை பலரின் கருத்துக்கள் மூலம் அறியமுடிந்தது.
ஸ்ரீலங்காவில் தமிழர் தலை நிமிர்ந்து வாழ முடியாது என எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் கோடிட்டு காட்டிநிற்கின்றன.
ஈ.பி.டி.பி கட்சியின் பிரதான கோஷம் ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றுமே பிரியாத வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்” இதில் வரும் இறுதி வரியை அழுத்திக் கூற வக்கில்லாத கௌரவ அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தமிழரின் தலைவிதியை தீர்மானிக்க மகிந்தவுக்கு சாத்தியமான பத்து விடயங்களை முன்வைத்து ஆதரவு கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு முக்கியம் தேவை அபிவிருத்தி பணிகள் தான் என கருணாவும்…
எப்படியோ புலிகளை குற்றம் சாட்டி பாதி காலம் கடந்துவிட்டது ஆனால் இவர்களால் வடக்கு கிழக்கு பிரிவை கூட தடுக்க முடியவில்லை.
இது போன்ற கதிரை அரசியலை காரணம் காட்டி தான் பிரபாகரன் தீவிரமான ஆயுத போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. இன்று அதன் முடிவு யாவருக்கும் தெரியும், இது சுருக்கம்.
இந்த நிலையில் இன்றைய அறிக்கை பல விடயங்களை உணர்த்துவதாக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு அறிக்கையாகவே கருத இடமுண்டு.
உள்நோக்கத்துடனோ அல்லது உண்மையாகவோ வெளிவந்திருக்கும் இவ் அறிக்கையானது, தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை, தமிழர்களின் சுதந்திரம் அத்திய அவசியமானது, தமிழர்களுக்கு தன்னாட்சி அவசியமானது என உணர்த்துகின்றது.
உண்மையாக இவ் அறிவிப்பாக இது இருந்தால்?!!!
- குறிப்பிட்ட அமைப்பானது விடுதலைப் புலிகள் விட்ட பயணத்திலிருந்து தொடரப்பட வேண்டும். புதிய கல்லறை வரலாறுகளை படைக்காமல் ஏற்கனவே அத்திவாரமிடப்பட் கல்லறைகளிலிருந்து தொடரப்பட வேண்டும்.
- விடுதலைப் புலிகள் பயங்கரவாத யுத்தத்தை செய்யவில்லை தமிழ் மக்களுக்கான சுதந்தரத்திற்கான போராட்டங்களையே முன்னெடுத்தனர் என்பதை முதலில் சர்வதேசத்திற்கு புரியவைக்க வேண்டும்.
- புலிகளை காரணம் காட்டி நழுவி வந்த ஸ்ரீலங்கா அரசையும் மாற்றுக் கருத்துள்ளோர் என கூறப்படும் தமிழ் அரசியல் கட்சிகளையும் மக்கள் தமது தோழன் யார் என புரிவதற்கான சர்ந்தப்பம் (காலம்) வழங்கப்ட வேண்டும்.
- தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் தமது உறவுகளை கண்டுபிடிக்க, மற்றும் தமது உறவுகள் வீடு திரும்ப காலம் தேவைப்படுவதுடன் தற்போதைய துயரை மறக்க காலம் தேவைப்படுவதை உணரவேண்டும்.
- மக்களின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு செயற்படுவதுடன், ஒழிவு மறைவில்லாத தொடர்பாடலை மக்களுடனும் சர்வதேச ரீதியிலும் வைத்திருத்தல்.
- மிக மிக முக்கியமாக விடுதலைப் புலிகளின் கடந்த கால செயற்பாட்டின் மீள்பார்வையை கொண்டிருக்க வேண்டும்.
உள்நோக்கத்துடன் வெளிவந்த அறிவிப்பாக இருந்தால்?!!!
- போர் முடிவுக்கு வந்து சுமார் இரண்டு மதாத்திற்கிடையில் இதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டது என்றால் சாத்தியமான விடயமா?
- அப்படி ஒரு திட்டம் இருப்பதென்றால் ஏன் ஜனாதிபதி தேர்தல் வேளையில் அறிவிக்க வேண்டும் தேர்தலின் பின் அறிவிக்க முடியாதா?
- தொடர்புடைய அமைப்புகளை ஆரம்பத்திலே அறிவிப்பது சாத்தியமா?
- ஒரு செயற்பாடே இல்லாமல் எடுத்த எடுப்பிலே பிரித்தானியா ஊடகத்திற்கு செவ்வி வழங்கியது ஏன்?
- சிறுவர்கள் அமைப்பில் இணைய வந்துள்ளார்கள் என காட்ட முற்பட்டது ஏன்?
- மிக மிக முக்கியமாக வவுனியா இடைத்தங்கல் முகாம் அவலத்தை வெளிப்படுத்திய சனல்-4 செய்தியாளர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுத்த அரசு ஏன் இது வரை தி டைம்ஸ் செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?
- குறிப்பிட்டு வவுனியா முகாமில் இருந்து வெளியேறுவேரிலிருந்து உறுப்பினர்கள் இணைவார்கள் என கூறியதற்கான காரணம் என்ன?
- அவ்வாறு இணைந்தாலும் எவ்வாறு கிழக்கிற்கு அழைத்து செல்ல முடியும்?
- எதிர்காலத்தில் இவ்வளவு உறுப்பினர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கும் அவ் அமைப்பு ஏற்கனவே மறைவிடத்தில் உள்ளது பெருந்தொகை உறுப்பினர்கள் அமைப்பில் இணைந்தால் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவு செய்யக்கூடிய பண வசதிகள் எப்படி கிடைக்கும்?
- விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அறியப்பட்ட கே.பி.யை கடத்தி கொழும்பிற்கு அழைத்து வருவதற்கு துணிவு கிடைக்கும் அளவிற்கு புலனாய்வுத் துறையின் ஊடுருவல்களை கண்டுகொள்ளாமல் எப்படி அறிக்கையிட முடிந்தது.
என கேள்வி மீது கேள்வியை தொடுக்கக் கூடிய அறிக்கையாகவே உள்ளது.
இதற்கிடையே பலஸ்தீன விடுதலை அமைப்பு தமக்கும் இந்த இயக்கத்திற்கும் எதுவித தொடர்புகளும் இல்லை என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது.
குறிப்பிட்டுள்ள அமைப்பு தான் தொடர்பு கொண்டுள்ள அமைப்பு என கூறும் சக்திகளின் தொடர்புகள் எந்த விதத்திலும் ஏற்கக் கூடியதல்ல.
எது எப்படியோ இந்தயாவிற்கு தெரியாமல் எதுவும் செய்யமுடியாது என்பது உண்மை இந்த நிலையில்.
“பாலஸ்தீன விடுதலைப் படை, கியூபா மற்றும் இந்திய மார்க்சிஸ்டுகள் ஆகியோருடன் நாங்கள் இப்போதும் தொடர்பில் இருக்கின்றோம். அவர்களும் எங்களைப் போன்றே தமது உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள், எனவும் கோணேஸ் தெரிவித்தாராம்.
இந்த உறவுகள் தமிழ் மக்களை மேலும் சர்வதேசத்திலிருந்து அந்நியப்டுத்துமே தவிர ஒட்டவைக்காது.
இதற்கிடையே டிசம்பர் 4ம் திகதி நள்ளிரவு கல்லடி திருச்செந்தூரைச் சேர்ந்த 21 வயதான கிறிஸ்ரியன் றொபின்சன் வெளிநாட்டுக்கு செல்லும் சட்ட விரோத பயணத்தின் போது ஸ்ரீலங்கா படையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொற்றோர்களும் சம்பவத்தில் காயப்பட்டவர்களும் கூறுகையில் இராணுவப் பேச்சாளா உதயநானயகார கூறுகின்றார் படையினரின் ஆயுத்தை பறிக்க முற்பட்டபோது துப்பாக்கி வெடித்து ஒருவர் மரணமானார் என்கிறார்.
தாம் கொல்லுவதற்கு நியாயம் கூறும் ஸ்ரீலங்காவிற்கு தீனி போடுவது போலவே குறிப்பிட் அமைப்பின் அறிக்கை உள்ளது.
அதாவது
- உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் தமிழரின் நிலங்கள் இராணுவத்தின் கையில் இருப்பது நியாயமானது
வன்னியில் உள்ள மரங்களிலும் அதிகமாக இராணுவத்தினர் நிறுத்தப்படுவது அவசியமானது - கடல் எல்லைகள் தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியமானது
- தடுப்பு முகாமில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் அப்பாவிகளின் தொடர்ந்தும் சிறையிலிருப்பது அவசியமானது.
தமிழர் பிரதேசங்களும், தமிழர் அனைவரும் சோதனைக்கு உட்படுவது அவசியமானது - பயங்கரவாத தடை சட்டம் தொடர்ந்தும் அமலில் இருப்பது அவசியமானது
- பாதுகாப்பு செலவினங்களின் உயர்வு அவசியமானது
தமிழர் நிலங்களில் இலாணுவத்தினர் நிறுத்தப்படுவது அவசியமானது - அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்
என்ற ஸ்ரீலங்காவின் வாதங்களை வழிமொழிவதாக அமைவதுடன், தமிழர்களின் சுதந்திர போராட்டத்தில் எவ்வளவு கொடுமைகள் அனுபவித்தார்களோ அத்தனையும் நியாயமானது என கூறுவது போலும் உள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு நல்லதை செய்ய இருக்கையில் தமிழர் தரப்பு தான் குழப்பிவிடுகின்றது என்ற தமிழின விரோதிகளின் கருத்தையும் வலுப்படுத்துகின்றது.
மேலும் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் உட்பட சிலரை உயர வைத்திருக்கும் மகிந்த குழு அவர்களுக்கும் வேறு வழி திட்டங்களை வைத்திருக்கின்றது என வாய்பேச்சாக கூறப்படுவதற்கு செயல்வடிவம் கொடுக்க இந்த அமைப்பின் உதயம் கைகொடுக்கும்.
அத்துடன் புலம் பெயர் புலிசெயற்பாட்டாளர்களை இலகுவில் உள்வாங்கி அவர்களை அழித்தொழிப்பதன் ஒரு கட்டமாகவும் இருக்கலாம்? அதாவது காந்தம் துண்டு மூலம் மண்ணிலிருக்கும் இரும்புத் துகள்களை இலகுவில் கவர்வது போன்ற ஒன்றாகவும் இதை பார்க்க வேண்டும்.
இது இவ்வாறிருக்க ஏற்கனவே விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தேன் என்ற திமிரிலிருக்கும் ஸ்ரீலங்கா எஜமானார்களின் சொல்லைக் கேட்காமல் நடக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு ஆப்பு அடிப்பதற்கும் வெளி நாட்டு சக்திகள் இவ் அமைப்பை ஏவியிருக்க வாய்புள்ளது.
இவ்வாறான ஒரு அமைப்பை வெளிநாட்டு சக்கதிகள் தம் நலனுக்காக உருவாக்கும் என தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக நம்பப்பட்டது. ஆசிய பிராந்திய போட்டியில் அப்பாவித் தமிழ் மக்களும் அவர்களின் சுதந்திர வேட்கையும் பகடைக் காய்கள் என்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளதன் நம்பிக்கையே அது.
சம்பந்தபட்ட கோணோசுக்குத்தான் உண்மை புரியும்.
அனால் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு ஆயுதப் போராட்டம் அல்ல. இதை தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் கூறுகையில் (தவறுகளுக்கு அப்பால்) ‘விடுதலைப் புலிகளாகிய நாமும் தமிழ் மக்களும் ஆயுதங்களை நேசிக்கவில்லை நாங்கள் ஆயுதங்களை தூக்கவுமில்லை அது எங்கள் கைகளில் திணிக்கப்பட்டது”
இவை எல்லாவற்றுக்கும் காரணம் தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை என்பதை நம்ப வைக்கும் முயற்சிகளின் பெறுபேறுகளும், மாவீரர் தின உரைகளை மூன்று தலைகள் நிகழ்த்தியதன் மூலம் ஒற்றுமைப்பட முடியாத இனமாக தமிழினம் தன்னை மீண்டும் அடையாளப்படுத்திக் கொண்டதன் விளைவுகளுமே.
மாவீரர் தினம் நிறைவடைந்து சுமார் பத்து நாட்களுக்குள் இவ் அறிவிப்பு வெளிந்திருப்பதை கவணிக்கவும்.
மேலும் தி டைம்ஸ் செய்தியின் படி 15முதல்16 வயது சிறுவர்கள் குறிப்பிட்ட அமைப்பில் இணைய ஆயத்தமாக அங்கே நின்றார்கள் என்று.
தமிழர்கள் சிறுவர்களை பயன்படுத்தி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் என்பது தான் சுருக்கம்.
ஆகவே எமது முன்னைய போரட்டத்தின் பயனை இன்னும் அறுவடை செய்யாமல் உள்ள நிலையில் இன்னுமொரு குற்றச்சாட்டை தமிழினம் மீது தி ரைமஸ் சுமத்தியுள்ளது.
தலைமைக்கு நடக்கும் போட்டியில் தமிழன் மூழ்கியிருக்கையில் இது போன்ற குற்றச் சாட்டுக்கள் எருமை மாட்டின் மீது பெய்யும் மழையாகவே இருக்கும்.
தமிழருக்கு மீண்டும் அழிவு வேண்டுமா? தாயகத்தில் உள்ள எம் உறவுகள் அரக்க பசிக்குள்ளாக வேண்டுமா? எமது இனத்துக்கு என்றுமே நிம்மதி கிடையாதா? உணர்வுள்ள தமிழர்களின் கண்ணில் இவ்வரிகள் தென்பட்டால், புதிதாக உருவாகியிருக்கும் மக்கள் விடுதலை இராணுவம் நியாயமானதோ? நியாயமற்றதோ? பின்னனிஉள்ளதோ? பின்னனி அற்றதோ? அது வேண்டாம் என சர்வதேசத்தின் முன் குரல் கொடுங்கள். நாங்கள் குழந்தைப் போராளிகளை அனுமதிக்கவுமில்லை எமது சுதந்தரத்திற்காக பலிகொடுக்க தயாரகவுமில்லை என கூறுங்கள்.
குறிப்பு:- வழமைபோன்று இப் பந்தியும் பல பொது மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி எழுதப்பட்டதாகும்.




FMM
JDS
NSLJA
RSF
UsTamil
Vincent Jeyan




![Lazy Lass [eXPLoReD] Lazy Lass [eXPLoReD]](http://static.flickr.com/7083/7272226034_3d95aba441_t.jpg)




0 Responses to “வேண்டாம்!வேண்டாம்!! மீண்டும் ஒரு போராட்டம் வேண்டாம்!!!”