பகுத்தறிவுள்ள தமிழ் ஊடகங்கள் வேண்டும்
இலங்கையில் நிறைவடைந்த யுத்தத்தையடுத்து, ஊடகங்களினால் ஏற்படுத்தப்படும் ஊடக வன்முறையானது தமிழ் மக்கள் மீது அதிக தாக்கத்தை செலுத்துகின்றது.
விடுதலைப் புலிகளினால் இராணுவ தளங்களை கைப்பற்றும் பொழுது மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கு திரும்பும் பல சர்ந்தப்பங்கள் நிகழ்ந்தது. எனினும் அவ்வாறு கைப்பற்றப்பட்ட பகுதிகள் மீண்டும் பறிபோகையில் அது மீண்டும் கைப்பற்றப்படும் என்ற நம்பிக்கையும் இருந்தது.
உதாரணமாக யாழ் கோட்டை பகுதி 1990ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட போது மக்கள் விறுவிறுப்படைந்து அப்பகுதிக்கு விரைந்து தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதுடன் யாழ் நகர் மீண்டும் உயிர்பெற்றது. அது முதல் ஓயாத செல் தாக்குதலும் துப்பாக்கி பிரயோகமும் விமானத்தாக்குதல் மற்றும் தாக்குதலினால் யாழ் நகரம் முற்றாக செயலிழந்திருந்தது. அவ்வாறு யாழ் நகரம் செல்லுபவர் மீண்டும் வீடுதிரும்புவாரே? என்ற நிலைமையே இருந்தது.
1990ம் ஆண்டு புலிகள் யாழ் கோட்டையை கைப்பற்றியதினால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு யாழ் மக்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டதுடன் குடாநாட்டின் மொத்த செயற்பாடுகளும் உயிர் பெற்றன. எனினும் 1995ம் ஆண்டு குடா நாடு முற்று முழுதாக ஸ்ரீலங்கா படையினர் கைப்பற்றிய பின்னர் 1996ம் ஆண்டு மக்கள் மெல்ல மெல்ல மீளக்குடியேறி போர்க்கால இயல்புநிலையை அடைந்தனர். செம்மணி மனிதப் படுகுழி உட்பட ஆங்காங்கே நிகழும் கொலைச் சம்பவங்களும் என யாழ் நகரம் மலர்ந்தது. இருப்பினும் பெரும்பான்மையான குடாநாட்டு மக்கள் மீண்டும் புலிகள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள். இது புலிகள் இருந்த காலத்தின் நம்பிக்கை.
இன்று முற்றுமுழுதாக புலிகள் அழிக்கப்பட்டுள்ளார்கள் நிலம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்தப் பக்கத்தில் சாய வேண்டும் என்ற அச்சம் நீக்கப்பட்டள்ளது, ஆகவே இதனால் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறவர்கள் யார்? நூற்றுக்கு ஆயிரம் வீதம் சந்தோஷப்பட வேண்டியவர்கள் தமிழர்களே.
ஆனால் தத்தமது தனிமனித வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தில் காட்டிக்கொடுப்பும், பழிதீர்க்கிறதும், தந்திரமும், சுயலாபமும், சுயநலமும், பணஆசையும், வெளிவேடமும், சந்தேகமும் , பிடுங்கிறதுமான ஒரு இனமாக ஒரே வார்த்தையில் சொன்னால் “வன்முறை சமூகமாக” தமிழர்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவ் உண்மையான சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்ட முறையில் ஊடகங்கள் செயற்படுவதினால் தொடர் பாதிப்புக்களை தமிழ் மக்கள் சந்தித்து வருகின்றனர்.
கூறவிருக்கும் விடயத்தை விளங்கி கொள்வதற்கு மேற்கூறிய பந்திகளை மனதிலிருத்துவது அவசியமானதாகும்.
ஏற்கனவே கூறிப்பிட்டது போல தமிழர்களிடையே ஏற்படுத்தப்பட்டுவரும் வன்முறை சமூக போக்கு ஊடகங்கள் வரை குறிப்பாக தமிழ் ஊடகங்களில் பரவியுள்ளதால் தமிழ் சமூகத்தினரின் மனங்களை ஆங்காங்கே பாதித்துள்ளது. சில வேளைகளில் தனிப்பட்ட விரோதங்களுக்கும் காரணமாய் அமைந்துவிடுகின்றது.
ஊடகங்களினால் மேற்கொள்ப்படும் இவ் ஊடக வன்முறையை, சர்வதேச ஊடக நிறுவனங்கள் குறிப்பாக சீ.என்.என் போன்ற ஊடகங்கள் யுத்த காலங்களிலும் கடைப்பிடித்து வந்தன.
இவ் வன்முறைகளுக்கு “கொழும்பு சிந்தனை” மற்றும் ஊடக நிறுவனங்களின் போட்டித் தன்மைகள், கொள்கைகள், போன்றனவும் தாக்கத்தை செலுத்தின.
சர்வதேச ஊடக நிறுவனங்கள் உட்பட (குடாநாட்டு பத்திரிகை நிறுவனங்கள் தவிர்ந்த) ஏனைய ஊடக நிறுவனங்கள் யாவும் கொழும்பில் தலைமையகத்தை கொண்டு செயற்பட்டதினால் வடக்கு-கிழக்கில் நிகழும் சம்பவங்கள் குறித்த தகவல்களை பெற்றனனவே தவிர அதன் ஆழங்களை அவைகளால் அறிய முடியவில்லை, இதற்கு ஸ்ரீலங்காவில் ஏற்படுத்தப்பட்டிருந்த செய்தி தணிக்கையும் ஒரு காரணம் என்பதுடன் ஊடகவியலாளர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு விதித்த தடையும் காரணமானது உண்மை தான்.
எனினும் இத் தடைகளை அறிந்த சர்வதேச ஊடகங்கள் தம்மை சுதந்திரமாக நடமாட அனுமதித்த பகுதிகளில் அதாவது சிங்களவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளின் சம்பவங்களை துல்லியமாக அறிக்கையிட்டதுடன் உடனடி செய்திகளுக்கும் முக்கியத்துவமும் அளித்துவந்தனர்.
மேலும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நபர்கள் அவ் ஊடக அலுவலகங்களில் கடமையாற்றியதும் ஒரு காரணமாக இருந்தது. எனவே தான் சிங்கள பகுதிகளில் ஏற்பட்ட சமூக (யுத்த விளைவுகளை) தாக்கங்களை அவைகளால் அதிகளவில் உணர முடிந்ததுடன் அவற்றுக்கு முக்கியத்துவமும் அளித்தனர்.
சிங்கள பகுதிகளிலும் பார்க்க அதிகளவிலான தாக்கத்தை தமிழர்கள் மீது கடந்த 30 வருடங்களாக யுத்தம் ஏற்படுத்தியிருந்தது.
தமிழர்கள் மீது யுத்தம் என்ற போர்வையில் அரச தரப்பு மேற்கொண்டிருந்த தாக்குதல்கள் மற்றும் ந~;டஈடுவழங்க மறுத்தல்கள் என நீண்டு செல்லும் ஒடுக்குதல்களை வெளியிடுவதற்கு அரச ஆதாரங்களை நம்பியிருந்தன. தமிழர்களின் மீதான வன்முறைகள் தொடர்பில் அறிக்கையிடுவதில் பின்வாங்கி ஊடக தர்மத்தை மீறியிருந்த இவ் ஊடகங்கள், ஒரு சமூக மக்களின் கண்ணீர்களை பயங்கரவாதம் என்று வர்ணித்தும் இருந்தன, ஆகவே இவ் ஊடகங்களின் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை, எனவே இவை தமிழர்களிடையே நடுநிலைமையை இழந்து நின்றன.
இவ்வாறு சிங்கள பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான உடனடித் தகவல்களை வெளியிட்ட வேகம் வடக்கு-கிழக்கு பகுதி சம்பவங்களில் வேகம் காட்டவில்லை.
நாட்டில் ஊடகத்தின் மீது இறுக்கப்பட்டிருந்த தூக்குக் கயிற்றினை உணர்ந்திருந்தும் இச் சர்வதேச ஊடகங்கள் நாட்டில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இச் சமமற்ற முறையை கையாண்டிருந்தனர். இதனால் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வண்ணமாக அதாவது வன்முறை சமூகமாக சித்தரித்து விரக்தி மனநிலையை உருவாக்கியிருந்தார்கள்.
படையினர்pன் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு-கிழக்கு பகுதிகளில் இடம் பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் உத்தியோக பூர்வ தகவல்களாக அரசு வழங்கும் தகவல்களை எதிர்பார்த்திருந்தனர், ஆனால் அரசு வழங்கும் தகவல்களில் பெரும்பான்மையானவை பொய்யான திரிபுபடுத்தப்பட்ட முன்னுக்குப் பின் முரணான தகவல்களாகவே இருந்தன.
பொது மக்கள் வாயிலிருந்து உண்மைகள் வெளிவர காலம் சென்றதால் பல அப்பாவிகள் பயங்கரவாதிகளாக உலகிற்கு காண்பிக்கப்பட்டார்கள்.
உதாரணமாக:- என்னுடைய நண்பன் ஒருவன் 1997 ஆண்டு யாழ் தட்டாத்தெரு சந்தியில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் இலக்குத் தவறி படையினரின் துப்பாக்கி வேட்டில் கொல்லப்பட்டான். பாடசாலை மாணவனான ஐங்கரன் கொல்லப்பட்டதை ஸ்ரீலங்காவின் உத்தியோக பூர்வ வானெலி உட்பட அனைத்து ஊடகங்களும் பயங்கரவாதியை கொல்லப்பட்டார் என்றே தகவல் வெளியிட்டன, இதற்கிடையில் கொல்லப்பட்டவரின் சடலத்தை புலி உறுப்பினர் என்று ஒப்பமிட்டு கையேற்குமாறு பெற்றோரை இராணுவத்தினர் வற்புறுத்தியமைக்கு பொற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆயினும் சர்வதேசத்தில் அவனுக்கு குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரை நீக்கப்படவில்லை.
நட்டஈடு வழங்கப்படாத இக் கொலைகளுக்கு, நீதிமன்றம் சென்று மானநஷ்ட வழக்கு தொடர்வதற்கு தமிழ் பெற்றோர்கள் எவரும் துணியவில்லை, சடலம் கிடைத்ததே போதும் என்ற மனநிலைதான் இருந்தது, இருக்கின்றது.
இது போன்ற உதாரணங்கள் ஏராளம் உள்ளன.
இந்த நிலையில் சுமார் 30 வருட போர்க்கால இயல்புநிலை வாழ்க்கையை தமிழ் மக்கள் கடந்து கொண்டிருக்கையில் தமிழர் பகுதிகளில் இடம் பெற்ற குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு எதுவித முக்கியத்துவமும் வழங்கப்பட வில்லை என்றே கூற வேண்டும் குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இடம் பெற்ற கிளைமோர் தாக்குதலினால் பொதுமக்கள் பலரும், மற்றும் முக்கியஸ்தர்களும் (பொதுமக்களில்) கொல்லப்பட்ட சம்பவங்களை முற்று முழுதாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. சாட்சியமற்ற போரின் வாசல்களில் ஒன்றாக இந்த இருட்டடிப்பும் முக்கிய பங்கு வகித்தது.
மேலும் அதிக வெளியுலகத் தொடர்பு கொண்ட இவ் ஊடகங்கள் வடக்கு-கிழக்கில் படையினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதிகிளில் மட்டுமே சென்று பார்வையிட அனுமதிக்ப்பட்டன. அத்துடன் பொது மக்களும் அவர்களுடன் பேசுவதற்கு முன்வர தயங்கும் சூழ் நிலை அதிகமாக காணப்பட்டது. இச் சூழ்நிலையையும் கடந்து ஒரு சிலர் பேட்டிகளையும் வழங்கினர். அருகில் நிற்கும் இராணுவம், பிற மொழி ஊடகவியலாளாகள் என்ற காரணங்களினால் அச்சம் காரணமாக உண்மைக்கு புறம்பான உணர்வுகளை வெளியட்டவர்களும் உண்டு.
ஏற்கனவே கூறியது போல இவ் ஊடகவியலாளர்கள் “கொழும்பு சிந்தனையில்” மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தமையினல் அதாவது தமிழர்களின் விடுதலைக்கு எதிரான வாதங்களை அதிகமாக கேட்டிருந்ததினால் அல்லது புலி எதிர்ப்பு வாதங்களை அதிகமாக அறிவதற்கு சர்ந்தப்பம் கிடைத்திருந்ததினால், அந்த அடிப்படையில் அமைந்த எண்ணவோட்டங்கள் நிறைந்த கேள்விகளை சாதாரண மக்களிடத்திலும் (வடக்கு-கிக்கின் தமிழ்) கேட்டுக் கொண்டதினால் அவ் ஊடகங்கள் மீதான நம்பிக்கை முதல் சந்திப்பிலே தகர்ந்துவிட்டிருந்தது. இதனால் மாற்று மொழி ஊடகங்களுக்காக பணியாற்றும் வடக்கு-கிழக்கு ஊடகவியலாளர்கள் மீது எப்பவுமே சந்தேக பார்வை ஏற்படுத்தப்பட்டது.
இவ்விதமான ஒரு சூழ்நிலை ஊடகத்தினால் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் தாக்கத்தை செலுத்திக் கொண்டிருந்த அதேவேளை.
கொழும்பிலிருந்து செயற்பட்ட ஊடக நிறுவனங்கள் பிரதேச ஊடகவியலாளர்களின் குழுரீதியான செயற்பாட்டுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருந்து வந்தனர்.
கொழும்பிலுள்ள சக ஊடக நண்பர்களுடன் விடயங்களை பகிர்ந்து கொள்ளும் இவ் ஊடக நிறுவனங்களை சேர்ந்தோர், பிரதேச ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து இரகசியங்களை பேணுமாறு அறிவுறுத்தியிருந்தனர். இதனால் பல உயிராபத்து மிக்க சம்பவங்களை தன்னந்தனியாக அறிக்கையிட பிதேச ஊடகவியலாளர்கள் தூண்டப்பட்டனர். ஆகவே ஒருவரை முந்தி ஒருவராக சம்பவ இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டு வருமானம் எய்க்கும் நோக்கம் முதன்மைபடுத்தப்பட்டது. ஒரு குழுவாக செயற்படுவதினால் சகலருக்கும் பாதுகாப்பு, முறையான தகவல்,அவதாணிப்புகள், மற்றும் ஒருவருக் கொருவர் தொழில் ரீதியான புரிந்துணர்வு ஆகிய நன்மைகள் பெறும் விடையங்கள் தகர்த்தெறியப்பட்டது.
தனி செயற்பாடு:- இச் சம்பவத்திற்கு உதாரணமாக:- திரிகோணமலை ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் இழப்பை குறிப்பிடலாம். (வருமானத்திற்காக செயற்பட்டார் என்பதல்ல)
குழுரீதியான செயற்பாடு:- மேலும் 2005ம் ஆண்டு யாழ் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி செவினிரத்ன கொல்லப்பட்ட சம்பவத்தை படம் பிடித்த ஊடகவிலயாளர்கள் உயிராபத்தின்றி விடுவிக்கப்பட்டதை கூறலாம்.
குழுரீதியான செயற்பாடுகள் மழுங்கிய நிலையில் இருந்த காரணத்தால் பல சம்பவங்களில் அப்பாவிகள் வீண்பழி சுமத்தப்பட்டனர். உதாரணமாக :- 2006ம் ஆண்டு நெல்லியடியில் முச்சக்கர வண்டியில் கொல்லப்பட்ட 7 துறைமுக தொழிலாளர்களும் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டிருந்தமை போன்ற சம்பவங்கள்.
ஊடகவியலாளர்கள் மீதும் ஊடகங்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை யாழ் ஊடகவியலாளர் நிமலராஜனின் மரணத்தின் சிறிய கால இடைவெளியின் பின்னர் மீண்டும் மூத்த ஊடகவியலாளர் சிவராமில் ஆரம்பித்து இறுதியாக லசந்த வரைக்கும் சுமார் 30 ஊடகவியலாளர்கள் ஊடக பணியாளர்களை பலிகொண்டது.
தமிழர்களின் தேவையை, விருப்பத்தை, நோக்கத்தை கூறுபவர்களை அரச ஊடகங்களும் தமிழ் எதிர்ப்பு ஊடகங்களும் பயங்கரவாதம் என கூறியதுடன் அது போன்ற கருத்துடையோரை புலிகள் எனவும் கூறுகின்றன. இந்த வகையில் தமிழர்களின் உள்ளக்கிடக்கைகளை அதிகளவில் சிங்கள மொழிமக்கள் மத்தியில் அம் மொழி ஊடகங்கள் ஊடாக எடுத்துச் சென்றவர்களான பாரளுமன்ற உறுபினர்கள் அமரர் ரவிராஜ்;, அமரர் மகேஸ்வரனின் இழப்புக்களும் சமாதானத்தின் மீதான நம்பிக்கையில் பாதிப்பபையும், கருத்து சுதந்தரத்திற்கான அச்சுறுத்தலையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
போராட்ட ஆரம்ப காலங்களில் “ஈழநாடு, முரசொலி” பத்திரிகைகள் மீதான தாக்குதல்களும் இவ் அச்ச நிலையை உருவாக்கியிருந்தன.
போராட்ட ஆரம்ப நாட்களில் விடுதலை உணர்வுகள் தமிழ் மக்களிடையே அலைபோல பொங்கி எழுச்சியடைந்திருந்ததினால் தமிழ் ஊடகவியலாளர்களும் இவ் விதியில் சிக்கிக் கொண்டதால், நாளடைவில் போராட்ட குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சகோதர பிரிவினைகளை முன்கூட்டியே எச்சரிக்க முடியாத நிலையில் இருந்தனர் அல்லது விமர்சிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தவிர்க்க முடியாத இத் “தேசிய உணர்வு” காலப்போக்கில் கருத்து வேறுபாடுடையோரை “தேசத்துரோகி”களாக இனம் கண்டு கொண்டது. (கண்காணிப்பு அவசியமானது எனினும்…, ஸ்ரீலங்கா அரசு இன்று இதனை கடைப்பிடிக்கின்றது.) எனவே “தமிழ் தேசிய உணர்வு” தான் தமிழ் ஊடகவியலாளர்களின் பணி என்ற மனநிலை வளர்க்கப்பட்டிருந்தது. இதற்கப்பாற்பட்ட சிந்தனையுள்ள ஊடகவியலாளர்கள் ஓரம்கட்டப்பட்டிருந்தனர்.
உதாரணமாக:- விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டு பகுதியில் இயங்கும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டிருந்தனர். எனவே தமது கட்டுப்பாட்டு பகுதியில் நிகழும் சம்பவங்கள் தொடர்பில் தமது ஊடகங்களினூடான தகவல்களை வழங்கிவந்தனர். வேறு ஊடகங்களையோ ஊடகவிலயாளர்களையோ தமது கட்டுப்பாட்டு பகுதியில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்காமையானது இறுதியில் ஆபத்தில் முடிவடைந்ததுடன் “சாட்சியமற்ற போரின்” முதல் வாசல்படியாக விளங்கிற்று.
இதற்கிடையில் கொழும்பிலிருந்து செயற்பட்ட ஊடக அமைப்புக்கள் கருத்தரங்குகள் போன்ற செயற்திட்டங்களை நடாத்துவதற்கு பிரதேச ஊடக அமைப்புக்களினூடாக அழைப்புகளை செய்வதற்கான முக்கியத்துவத்தை கொடுக்காது தனிநபர்கள் மூலம் இவ் ஏற்பாடுகளை தொடர்ச்சியாக செய்து வந்ததினால் பிரதேச ஊடக ஒழுங்கமைப்பு படிப்படியாக சிதைக்கப்பட்டது. இந் நிலை வடக்கு-கிழக்கு மலையகம் உட்பட நாட்டின் சகல பிரதேச ஊடக அமைப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
பிரதேச ஊடகவியலாளர்கள் குறிப்பாக வடக்கு-கிழக்கு ஊடகவியலாளர்கள் ஒன்றினைந்த செயற்பாடுகளுக்கு யுத்த சூழ்நிலை ஒரு தடையாக இருந்து வந்த நிலையில் ஊடக அமைப்புக்கள் இவ் விடையத்தில் கையாண்ட விதமும் ஒருவித விரிசலை ஏற்படுத்த காரணமாய் அமைந்தது.
இதனால் பிரதேச ஊடக ஒழுங்கமைப்பின் பலம் குன்றி காணப்பட்டது, மேலும் இந்நிலை தொடர்வதாகவே உள்ளது. தவிரவும் பிரதேச ஊடக அமைப்புக்களும் தத்தமது முக்கியத்துவம் தெரியாத நிலையும் ஏற்படுத்தப்பட்டதுடன், பிரிந்து செல்லும் மனநிலையை அதிகமாக வளர்த்துள்ளது.
அடிப்படையில் இவ்வாறு பிரதேச ஊடாக ஒழுங்கமைப்பில் ஏற்படுத்தியுள்ள இத் தாக்கம் சமூகத்தில் பொறுப்புக் கூற யாருமற்ற நிலையை தோற்றுவித்துள்ளது. மேலும்; சமூக பெறுப்பற்ற சிந்தனைப் போக்குள்ள ஊடக சமூகத்தை ஊக்குவிப்பதாகவும் உள்ளது.
மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய விடயங்களை,உண்மைகளை பக்குவமாக மக்கள் மத்தியில் ஏடுத்துச் சொல்ல தவறியதால் மாற்றுக் கருத்துள்ள ஊடகங்களை பெரும்பான்மையானன தமிழ் மக்கள் வெறுத்து வந்தனர். (அனுபவரீதியாக வந்தவர்கள் மட்டுமே அவ் ஊடகங்களை நாடினர்.) சீர்கேடான வார்த்தை பிரயோகங்களை அதிகளவில் இவ் மாற்றுக் கருத்துடையோரின் ஊடகங்களில் காணக்கூடியதாக இருப்பதும் மக்களின் வெறுப்புக்கு காரணமாகின்றது. தமது குறைகளை மூடிமறைப்பதற்கு அவர்கள் தெரிவிக்கும் பொய்களையும் கட்டுக் கதைகளையும் குழந்தைகள் கூட ஏற்பதில்லை.
மேலும் யுத்தம் முடிவடைந்த நிலையில், விடுதலைப் புலிகளின் தலைமை முற்று முழுதாக அழிக்கப்பட்டள்ள நிலையில், சகிக்க முடியாத இத் தோல்வியை ஜீரணிக்க முடியாத நிலையில் இலங்கையில் வெளியாகும் அச்சு ஊடகங்களுக்கப்பால் புலம் பெயர் தேசங்களில் வெளியாகும் ஊடகங்கள் பெரும் உளவியல் பாதிப்புக்களை தமிழ் வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.
இதன் காரணமாக பலர் ஊடகத்தை நாடுவதை விட்டுவிடுவதுடன் இன்னும் சிலர் தமது மொழிக்கு அப்பாற்பட்ட ஊடகங்களை நாடும் நிலை ஆங்காங்கே முளைவிட ஆரம்பித்துள்ளது. இவ் மாற்று ஆற்றுகைகள் நல்ல தெரிவுகளாக இருந்தாலும், இதற்கு தமிழ் ஊடகங்களில் ஏற்பட்ட நம்பிக்கையீனமும் ஒரு காரணமாக அமைகின்றது.
தமிழ் ஊடகங்களிடையே (பிறமொழிகளிலும்; இயங்கும் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான ஊடகங்கள் உட்பட) பயன்பாட்டிலுள்ள வன்முறைச் சொற்கள் ஏற்கனவே பாரிய உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக்கியிருந்தன.
“பயங்கரவாதி” “பாசிச புலிகள்” “புலிப் பிணாமிகள்” “துரோகி” “தேசத் துரோகி” “தமிழ் தேசியம்” “காட்டிகொடுப்பு” போன்ற சொற்கள் புலிகளின் அழிவின் பின்னர் பாரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி ஊடகங்கள் மீதான வெறுப்பை ஏற்படுத்திவருகின்றன.
தரமாக செயற்படும் ஊடகங்களையும் இவை பாதிக்கின்றமையினால் தகவல் தொடர்பில் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுவருகின்றது.
குறிப்பாக புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களே இப் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனர். வேலைப்பழுக்கள் மத்தியில் வாழும் இவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஊடகங்களிடம் இருந்து பாதுகாப்பு அவசியமாகின்றது.
இங்கையில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அதாவது மக்கள் துன்பம், இராணுவ கெடுபிடி, போன்ற விடயங்களின் அடிப்படையில் இயங்கிய புலம் பெயர் தமிழ் ஊடகங்கள், தொடர்ந்தும் அப் பாணிகளை கையாள்வதினால் மேலும் இழப்புக்களுடன் இருக்கும் மக்களின் மனதை காயப்படுத்தும் நிகழ்வுகளாக அமைகின்றது ஆகவே சகிக்க முடியாத பலர் அவற்றை வெறுக்கும் நிலை ஏற்படுவதுடன், நேரடியான தொடர்புகளின் போது பலர் உணர்ச்சிவசப்பட்டு வன்முறை மனப்போக்கை காண்பிக்கின்றனர். உண்மை நிலையை இன்று அதிகமானோர் புரிந்த நிலையில் அவ் ஊடகங்கள் மீதான நம்பிக்கையையும் இழந்து வருகின்றனர்.
இச் சூழ்நிலையில் வலைப் பதிவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து முரண்பட்ட தகவல்களை தாராளமாக பெறக்கூடியதாக உள்ளது. “வதந்தி”கள் வலைப்பதிவில் ஒட்டிக்கொள்ளுகின்றன.
“வெட்டு-ஒட்டு”க்காரர்களான இவர்கள் தமக்குட்பட்ட அனுபவத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் (பொழுது போக்கு அம்சமான வலைப்பதிவாளர்களை தவிர்த்து) இவ் “வெட்டு-ஒட்டு” பதிவாளர்கள் தமது செய்திகளுக்கான மூல ஆதாரங்களை வெளியிடுவதுமில்லை, அதனை சரி பார்ப்பதற்கு ஆசிரியரை வைத்திருப்பருதுமில்லை, வரலாற்றை அறிந்தவர்களுமல்ல, ஆனால் அவர்கள் கையில் எடுக்கும் விடயங்கள் பாரதூரமானவகைள்.
முற்று முழுதான இழப்பிற்குள் இருக்கும் ஒரு சமூகத்தக்கு இன்று ஊடகங்களினால் ஏற்படுத்தப்படும் இன்னல்கள் சிறியவைகளாக இருக்க முடியாது.
வன்னியில் படையினர் காயப்பட்ட மக்களை காப்பற்றியது என்பது அரசின் தகவல் ஆனால் எப்படி காப்பாற்றியது என்பது அனுபவப்பட்டவர்களின் கதறல்.
ஊதாரணமாக:- மே 13ம் திகதி இரு சகோதரர்கள் காயத்துக்குள்ளானார்கள் இளைய சகோதரன் சிறிய காயத்துக்குள்ளான அதே வேளை அடுத்தவர் பாரியகாயங்களுக்குள்ளானார். புலிகளின் மருத்துவ அணியினர் பாரியகாயங்களுக்குள்ளானவருக்கு மட்டுமே முதலுதவி அளிக்கிறர்ர்கள் ஒரு சேலைனும் ஏற்றினார்கள். யுத்தம் முடிவுக்கு வந்த மறுநாள் 19 திகதி பிள்ளைகளின் தந்தையான இளைய சகோதரன் இரண்டு காயம் அழுகிய நிலையில் புழுப்பிடித்து இறக்கின்றார். இறந்த உடலத்துடனும் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த 5பிள்ளைகளின் தந்தையான மூத்த சகோதரனுக்கும் நடுவில் தாயும். அருகில் வந்த இராணுவத்திடம் உதவி கோரிய தாய் உயிருடன் போரடிக்கொண்டிருந்த மகனை கைவிட்டு போக முடியாத சூழில் கதறுகின்றாள், அவர்களை விட்டுவிட்டு போகும் படி இராணுவம் கூறுகின்றது. தாய் மன்றாடுகின்றாள். இறந்த மகனின் கைவிரலில் இருந்த திருமண மோதிரத்தை தரும்படி துப்பாக்கியை காட்டி மிரட்டிய சிப்பாய்யிடம் மோதிரத்திற்காக மூத்த மகனின் உயிரை விலைபேசினாள். அதன் பின்னரே 5பிள்ளைகளின் தந்தை 20 திகதி மருத்துவமனைக்கு இராணுவத்தால் எடுத்துச் செல்லப்பட்டார். இன்று அவர் உயிருடன் இருந்ததால் இவ் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
தற்போது இராணுவ கட்டுப்பாட்டிலிருக்கும் வன்னிபகுதியில் பாலியல் ரீதியான உடன்பாட்டுக்குள் பெண்களை கொண்டுவருதற்கு அவர்களின் அடிப்படை பிரச்சனைகளை ஸ்ரீலங்கா சிப்பாய்கள் மோப்பம் பிடிபப்பதாக அறிய முடிகின்றது.
தமிழர்கள் இவ்வாறாக மிகவும் அடிமைப்படுத்தப்பட்டுள்ள இன்றைய நிலையில் ஊடகங்கள் மிக மிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.
தமிழ் ஊடகங்களுக்கென விஷேடமாக வலைப்பதிவாளர்களை தரப்படுத்தி தமிழ் சமூகத்திற்கு தொண்டு செய்ய வழிகாட்ட வேண்டும்.
அதிகமான வலைப்பதிவாளர்களும் அதிகளவான இணையத்தளங்களும் ஆரமப்பிக்கப்பட்டுள்ள இன்றைய தமிழ் ஊடக உலகில் ஏதோ ஒரு அரசியல் கட்சிகளோ அல்லது ஏதோ ஒரு பின்னனிகளுடனோ அல்லது நோக்கங்களுடனோ செயற்படுகின்றார்கள்.
கொள்கை வேறுபாடின்றி, அரசியல் வேறுபாடின்றி, பாதிக்கப்படும் மக்கள் சார்பில் குரல் கொடுக்க யாவரும் முன்வர வேண்டும். இதற்கென முதலில் “தமிழீழ வரலாற்றுக் குழு” ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் “தழிழீழம்” என்ற கோஷத்துடன் ஆரம்பித்து வைத்த இளைஞர்கள் புரட்சி ஏதோ காரணங்களுக்காக தவிர்க்க முடியாத வரலாறுகளை தோற்றுவித்து இன்று தமிழ் சமூகத்தை சர்வதேசத்தின் முன்னால் குரலற்றவர்களாக்கியுள்ளது. இத் தவறுக்கு ஆயுதம் ஏந்திய யாவரும் பொறுப்பாகியிருப்பதை தட்டிகழிக்க முடியாது.
ஆகவே அமைக்கப்படும் வரலாற்றுக் குழு கடந்த காலங்களின் சம்பவங்களை முறையாக பதிவுசெய்து உண்மை வரலாற்றை எதிர்வரும் சந்ததியினருக்கு எடுத்துக் கூறுவதுடன், நிகழ்கால சம்பவங்களுக்கும் குரல் கொடுக்க வல்லதாக அமைய வேண்டும்.
இதனூடாக சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் அவ நம்பிக்கைகளை நீக்குவதுடன், அடுத்தவரின் கருத்தை மதிக்கத்தக்க சமூகத்தையும் உருவாக்கி வன்முறையற்ற தமிழ் சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.
சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் விட்ட அடிப்படை தவறுகளுக்கு பரிகாரமாக, வலைப் பதிவுகளை தாமே மேற்கொண்டிருக்கும் வெட்டு-ஒட்டு பதிவாளர்களை தரப்படுத்தும் முயற்றியில் சர்வதேச ஊடக அமைப்புக்களும் அக்கறை செலுத்த வேண்டும். வதந்திகளும், தவறான கருத்தக்களும் ஆதாரமற்று வெட்டி ஒட்டப்படுவதால் அதுவே உண்மை என்ற நிலையை அடைந்த சம்பவங்கள் பலதும் நடந்தேறியுள்ளது. இந்த ஆபத்து மிக்க வலைப்பதிவுகள் புலம் பெயர் நாடுகளில் அமைதியை குழப்பிவிடும் சம்பவங்களாய் அமையும் என்பதில் ஐயமில்லை.




FMM
JDS
NSLJA
RSF
UsTamil
Vincent Jeyan




![Lazy Lass [eXPLoReD] Lazy Lass [eXPLoReD]](http://static.flickr.com/7083/7272226034_3d95aba441_t.jpg)




0 Responses to “MEDIA”