24
Aug
10

மக்களை பாதுகாக்க தவறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

வன்னியிலிருந்து பெண்களை தென்பகுதிக்கு அழைத்து செல்ல முற்பட்ட தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டை த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்திய சம்பவம் யாவரும் அறிந்ததே.
மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில் இந் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவது சகஜமே.
இச் சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட பா.உறுப்பினர் புலம்பெயர் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வி கொடுத்திருந்தார், குறிப்பிட்ட சம்பவம் அந்த தொலைக்காட்சிக்கு அன்று கிடைத்த அவல்,
மக்களின் ஆணையைப் பெற்ற த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர்களில் முக்கிய தலைவர்கள் இந்தியாவில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் இவ் வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றிருப்பதையும் இங்கு கவணிக்க வேண்டும்.
மீளக்குடியமர்ந்தவர்களில் அதிகமானவர்கள் பாதுகாப்பற்ற அதாவது பாம்பு, பூச்சிகளின் தொல்லைகளுக்கும் மற்றும் காட்டு மிருகங்களின் தொல்லைகளுக்குமிடையில் காட்டு வாசிகளைப் போல் சூழ்ந்திருக்கும் படையினர் மத்தியில் திறந்த வெளி சிறையில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் அங்கவீனமானோர்கள், கணவனை இழந்தவர்கள், துணையை இழந்தவர்கள், பாதுகாவலர்களை இழந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், மனரீதியில் பாதிக்கப்பட்டோர் என பல வகையினர் உள்ளனர். சுருங்கக் கூறின் தனிமையில் வாழ்பவர்கள் தான் அதிகம்.
இன்றைய இவர்களின் தனிமையை உணர்ந்துள்ள படையினர் அவர்களுக்கான உதவிகளை ஆங்காங்கே செய்தும் வருகின்றனர். கிணறு துப்பரவு செய்தல், வேலியிடல், காணிதுப்பரவு செய்தல், போக்குவரத்து உதவி என பல உதவிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
முற்றிலும் புதிய சூழலில் கிடைக்கப்படும் இவ் உதவிகளை நாடும் பொது மக்களுக்கும் படையினருக்கம் இடையில் பரஸ்பர உறவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது, இவ் பரஸ்பர உறவு பாலியல் இன்பம்வரை சென்றடைகின்றது என்கின்ற தகவல் கவலையை ஏற்படுத்துகின்றது.
தமிழ் சமூகத்து பெண்களை தகாதவர்கள் என்று சுட்டிக்காட்டுவதற்காக அல்ல இன்றைய அடிமை நிலையை புரிய வேண்டும், மக்களின் ஆணையை பெற்ற தமிழ்ப் பா.உறுப்பினர்கள் அதிலும் குறிப்பாக த.தே.கூட்டமைப்பினர் மக்களுக்கு எந்தளவு பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை புரிய வேண்டும் என்பதற்காக அதனை சொல்ல வேண்டி இருக்கின்றது.
தடுப்புக்காவலில் உள்ள கணவணின் அல்லது பிள்ளையின் அல்லது ஏதே ஒரு உறவுக்காக படையினருடன் ஒத்துழைத்து போக வேண்டிய சூழ்நிலையில் தமிழ் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் வருமான சிக்கல் பிற அத்திய அவசிய தேவைகளை எப்படி நிறைவு செய்வது என்று அறியாத குழப்பம் போன்ற பலவீனங்களை பயன்படுத்தி பெண்களை அங்குமிங்குமாக அலையவைக்கும் படையினர் இறுதியில் ஐந்நூறு ரூபாயை கொடுத்து மறுபடியும் வரும்படி கூறியுள்ள சம்பவங்களும் நிகழாமலில்லை, ஒருசிலர் இப்பழக்கத்திற்கு தம்மை மாற்றிக்கொண்டுள்ளனர் என்பதும் வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.
இந்த நிலைமைக்கு தமிழ் மக்களை இட்டுச் சென்றவர்கள் யார்? என்ற கேள்வி இறந்த காலம் ஆனால் யார் இட்டுச் செல்கின்றார்கள்? என்ற கேள்விக்கு நிகழ்கால பதில், த.தே.கூட்டமைப்பினர் என்பது தான்.
த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர்கள் வானத்திலிருந்து இறங்கிய தேவர்களோ, வேறு இனத்தை சார்ந்தவர்களோ, வேறுகிரகத்தவர்களோ, அல்லது வேறு நாட்டவர்களோ அல்ல. ஈழத்திலே பிறந்து வளர்ந்து ஈழத் தமிழர்களின் (புலம் பெயர் தமிழர்களின் அல்ல) வாக்குகளால் உயர்வாக்கப்பட்டவர்கள். இவர்கள் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை ஏராளம் உண்டு.
ஏற்கனவே தமிழர்களின் வாக்குகளால் தலைநிமிர்ந்தவர்கள் தமது உயர்குல சாதியை விட்டுக்கொடுக்காது மக்களை ஏமாற்றி அரசியல் புரிந்தவர்கள் என்பதும், ஆயுதப் போராட்டத்திற்கு இதுவும் ஒரு காரணி என்பதையும் வரலாறு கூறுகின்றது.
அதன் தொடர்ச்சியாக த.தே.கூட்டனியும் செயற்படுமானால் மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
புலிகள் இருந்த காலத்தில் த.தே.கூட்டமைப்பினர் (புலிகளின்)அவர்களின் தாளத்திற்கு தாம் ஆட வேண்டியிருப்பதாக சொல்லாமல் சென்னார்கள் ஆனால் இன்று…
2006ம் ஆண்டு மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது த.தே.கூட்டமைப்பின் எந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களும் யாழில் இருக்கவில்லை, ஏனெனில் அவர்கள் பருவகால பறவைகள் போலவே அன்றும் இருந்தனர்.
எனினும் சில மாதங்களின் பின்னர் வருகை தந்திருந்த பா.உறுப்பினர் மாவைசேனாதிராஜவிடம் யாழில் நிகழ்ந்த பதுக்கல்கள், குறிப்பாக பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் பதுக்கல்கள் பற்றி கேட்ட போது, “என்ன ஆதாரம் இருக்கின்றது?” என்ற மறு கேள்வியையே அவரிடமிருந்து பெறமுடிந்தது. ஏனெனில் திருச்சியில் குடும்பத்துடன் சுகமாக வாழுமிவருக்கு யாழில் நடப்பதை அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதில் நியாயமும் உள்ளது.
இது போலவே ஏனையவர்களும் அயல் நாட்டில் குடும்பம் நடத்திக் கொண்டு ஈழத்தில் அரசியல் செய்து கொண்டுடிருக்கிறார்கள். இவர்களால் எப்படி மக்களுக்காக உண்மையாக குரல் கொடுக்கமுடியும்.
த.தே.கூ பா.உறுப்பினர்களை சந்திப்பதற்கு மக்கள் தினமும் அலைந்த போதும் அவர்களை சந்திக்க முடியாமல் ஏங்கித் தவிக்கின்றனர்.
த.தே.கூட்டமைப்பினரை சந்திக் முடியாது என்ற அசையாத நம்பிக்கையினால் அவர்கள் வேறு வழியின்றி படையினரை நாடவேண்டியுள்ளது, இதன் போது பாலில் துன்புறுத்தல்களை சகிக்க வேண்டிய நிலைமையில் தள்ளப்படுகின்றனர்.
முன்னாள் பா.உறுப்பினர் கஜேந்திரனை நம்பி நின்ற பல பட்டதாரி மாணவர்கள் ஆளும் கட்சியை சார்ந்த முஸ்லிம் பா.உறுப்பினர்களுக்கு வால்பிடிப்பது தொடர்பாக ஒருவர் குறிப்பிட்ட மாணவர்களை கேட்ட போது, அவர்கள் விசனத்துடன் கூறியது “இவ்வளவு காலமும் நம்பியிருந்ததற்கு நடுத்தெருவில் இருத்திவைத்துள்ளது தான் அவர்கள் செய்த புண்ணியம் மீண்டும் எங்களுடைய அரசியல் வாதிகளை (த.தே.கூ) நம்பி மீதியையும் பறிகொடுக்கின்றதா? இவர்களால் எமது வீட்டுக்கு சோறு போடமுடியுமா?” என்று ஆதங்கப்பட்டார்களாம்.
காலகாலமாக உயர்குல தமிழ் அரசியல் வாதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டதன் எதிரொளிகள் தான் வடக்கு கிழக்குகளில் 20 வீதமான வாக்கு பதிவுகளுக்கு காரணமாயிருந்தது. மக்களுக்கு அரசியலில் ஏற்பட்ட வெறுப்புகளுக்கு இவைகளே காரணம்.
நீண்டு செல்லும் இக் குற்றச் சாட்டுக்களுக்கு தமிழ் பா.உறுப்பினர்கள் எப்போது தம்மை திருத்திக் கொள்வார்கள்.
நாட்டிலுள்ளவர்களை பாதுகாக்க முடியாதவர்களுக்கு அயல் நாட்டில் எதற்கு அலுவலகம்? இந்தியாவில் வசிக்கும் அல்லது மருத்துவ தேவைகளுக்காக செல்லும் த.தே.கூ பா.உறுப்பினர்கள் ஓய்வெடுப்பதற்காகவா அலுவலகம்? வரதராஜபெருமாள் இவ்விடயத்தில் நேர்மையானவராகவே தென்படுகின்றார்.
இந்தியாவில் வசிக்;கும் த.தே.கூ பா.உறுப்பினர்களுக்கான மறைமுக சலுகையாக கிடைக்கும் இவ் அலுவலகத்தை தவறவும் விடக்கூடாது, ஆனால் தற்போது உடனடியாக மக்களுக்கான தேவையான பல்வகை பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதும் முக்கியமாகும்.
இரும்பு ஆட்சியில் சிக்கியிருக்கும் இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மைதான். இதை சாட்டாக வைத்து மக்கள் மத்தியில் இல்லாமலிருப்பது மேலும் தமிழினத்தின் அழிவிற்கு வழியமைக்கும்.
வடக்கு கிழக்கில் அலுவலகங்களை திறந்து ஓரளவேனும் செயற்பட முயற்சிக்க வேண்டும். ஆவணப்படுத்தல்கள், தரவுகளையேனும் முறையாக கோவைப்படுத்தல்கள் என்ற கருமங்களையாவது செய்ய வேண்டும்.
குறிக்கப்பட்ட ஒரு சம்பவம் தொடர்பான அறிக்கைகளை ஒன்றுக்கு மேற்பட்டோர் தெரிவிப்பதால் ஒழுங்கின்மையை வெளிப்படுத்துகிறார்கள். கட்சியின் கட்டுப்பாடுகளை ஒவ்வொரு பா.உறுப்பினரும் பொறுப்புடன் கடைப்பிடிப்பதே இன்று தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய சேவையாகும். இதற்கு மாறாக ஆளுக்கொரு அறிக்கை வெளியிடுவதன் மூலம் தனிநபர்களின் விளம்பரத்தை தேடுவதாகவே அமையும் இது கட்டுக்கோப்புக்களை குறுகிய காலத்தில் தகர்த்து சின்னாபின்னமாகி தமிழ் மக்களை மேலும் பாதுகாப்பில்லாத சூழ்நிலைக்கே இட்டுச் செல்லும்.
குறிப்பாக புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களின் ஊடகங்களுடன் தொடர்புகளை துண்டிப்பது, அல்லது மட்டுப்படுத்துவது சிறந்தது. ஏனெனில் அவ் ஊடகங்கள் மூலம் சொல்லப்படும் விடயங்களை தற்போது மக்கள் அலட்சியப்படுத்த தொடங்கியுள்ளதால் அவரவர்களின் மதிப்பும் சரியும் என்பதில் ஐயமில்லை, மேலும் அவ் ஊடகங்கள் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு தம்மை நிலைநிறுத்திக் கொள்வதையே நோக்கமாயிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேறு சில மோசடிகளுக்கும் வழியமைக்கின்றன, (1983லிருந்து தமிழர்கள் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களால் எதை சாதிக்க முடிந்தது? மீண்டும் வீண் மாயைக்குள் மக்களை தள்ளி சீரளிப்பதா? என சிந்திக்க வேண்டும்)
தமிழர்களின் பிரதிநிதிகளாக தென்படும் த.தே.கூட்மைப்பு அதற்குரிய செயற்பாடுகளை இதுவரை காண்பிக்கவில்லலை, மாறாக அவரவர் வென்ற தொகுதிகளின் பேராதரவாளர்களை கையகப்படுத்தி மீண்டும் அவர்கள் மூலம் தமது இருப்பை தக்க வைப்பதையே சிந்திக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்காக எதை செய்ய வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலைதனும் இதுவரை தயாரிக்கவில்லை.
சர்வதேச போர் குற்ற விசாரனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் சிங்களத்திற்கு எதிராகவோ, தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் அன்றாட  பிரச்சனைகளுக்காகவோ குரல் கொடுப்பதையிட்டு சிந்தித்ததாக தெரியவில்லை.
தமது பிரதிநிதுத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக வடக்கு கிழக்குகளில் பணியாற்றும் அரச,அரசுசார்பற்ற பணியாளர்களை சந்தித்ததாகவோ, அல்லது வ.கிழக்கு பகுதிகளுக்கு வரும் முதலீட்டாளர்களை சந்தித்ததாகவோ, அல்லது விடுமுறையில் வ.கிழக்கு வரும் புலம் பெயர் தமிழர்களைதனும் (துறைசார்) சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவோ தெரியவில்லை.
மக்களுக்காக சேவை செய்யும் உள்ளம் கொண்ட உறுப்பினர்களும் இத் தவறான தலைமையின் முடிவுகளால் கையறுந்த நிலையில் உள்ளனர்.
40யுவதிகளை அழைத்துச் சென்ற சமயம் அங்கு த.தே.கூ பா.உறுப்பினர் ஒருவர் இருந்தபடியினால் அவர்களை பாதுகாக்க முடிந்தது. இச் சம்பவத்தில் பா.உ ஸ்ரீதரன் சம்மந்தப்பட்டிருந்தாலும், அவருடைய தொகுதியாக இருந்தாலும், ஊடகங்களுடனான தொடர்பில் கட்சியின் கட்டுப்பாடுகளை பின்பற்றியிருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் சொத்து, சுகங்களுடன் இழந்துள்ளது அவர்களின் மாணமும் மரியாதையும், மனத்தைரியமும் தான் ஆகவே இந்த வேளையில் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு த.தே.கூட்டமைப்பையே சாரும்.
தமிழர்களின் வரலாற்று ரீதியான முக்கியமான இக் கால கட்டத்தில் த.தே.கூட்டமைப்பு செயற்படாமல் தனிநபரின் விளம்பரத்துக்கான சுயலாப அரசியலில் ஈடுபட்டால் அது கறைபடிந்த சுவடாகவே வரலாற்றில் பதியப்படும்.
இக் காலகட்டத்தில் “பணம் கொட்டும் வழியை மட்டும் தேடிக் கொண்டிருக்கும் எமது தேசிய உணர்வாளர்கள் எமது மக்களை நடு வீதிக்கு கொண்டுவந்து இன்றும் ,மேலும் அவர்களின் கண்ணீர்களில், கதறல்களில் சுகம் அனுபவிக்கிறார்கள்.”
மக்களின் கண்ணீகளுக்கு அவர்கள் கணக்கொப்புவிக்க வேண்டும்.
“எங்கு கொடுக்கிறார்கள் எங்கு கிடைக்கும்” என ஏங்கித் தவிக்கும் இன்றைய தமிழ் மக்களின் அடிமை வாழ்வு நிலையை மாற்ற அனைவரும் ஒருமித்து போராட வேண்டும்.

1 Response to “மக்களை பாதுகாக்க தவறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு”


  1. 1 T.Ethirmannasingam
    September 3, 2010 at 9:02 pm

    மிக அருமையான கட்டுரை எமது மக்களின் அவலத்தையும் அரசியல் வாதிகளின் அலங்கோல அரசியலையும் சரியாக கூறியதற்கு பாராட்டும் நன்றியும்


Leave a comment


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

August 2010
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Flickr My Photos