30
Jul
10

யாருக்கு விடுதலை வேண்டும்?

போர் முடிவடைந்து சுமார் ஒருவருடமும் 3மாதங்களும் நிறைவடைவதற்குள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முக்கால் திட்ட சிங்கள மயமாக்கள் நிறைவேறியுள்ளது.
தமிழரிடம் என்றுமே ஏற்படமுடியாத ஒற்றுமையே அரசாங்கத்திற்கு இவ்வேலைத்திட்டத்திற்கான சக்தியை கொடுத்துள்ளது.
இலங்கையில் 70 சதவீதமான கடற்பரப்பு தமிழர் பகுதிகளில் உள்ளது. அதனால் தான் எந்தவொரு யுத்த காலத்திலும் கடற்றொழில் சமூகம் முதற் பாதிப்பிற்குள்ளாகியது.
இன்றும் முதற் பாதிப்பிற்குள்ளாகிவருவதும் அச்சமூகமே. பல கடற்றொழிலாளர் குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில் அவர்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அல்லது கடலுக்கு செல்வதற்கான உரிய பாதுகாப்பு வழங்கப்படாத காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே யுத்தகாலத்தில் கடற்றொழில் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான சட்டதிட்டங்களினால் புதிய தலைமுறையினர் இப் பாரம்பரிய தொழிலில் நாட்டமிழந்துள்ளதுடன் கடற்றொழிலை அறியாதுமிருக்கின்றனர்.
நிலைமை இவ்வாறிருக்கையில் தமிழர் கடற்பரப்புக்களில்(பாரம்பரியமாக தொழில் செய்யப்பட்ட) தற்போது சிங்கள மீனவர்கள் பாரிய தொழில்களில் ஈடுபட்டுவருவதாக அவ்வப்போது அறியமுடிகின்றது.
இதற்கிடையில் கிழக்கு பகுதியில் பிரபலமான கடற்கரை பகுதிகளில் தற்போது அதிக சுற்றுலாபயணிகள் வருவதாகவும், இப்பகுதிகளிலுள்ள இராணுவத்தினர் சுற்றுலா பயணிகளுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதாகவும், ஏற்கனவே அப்பகுதிகளில் வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடக்கின்றது.
மேலும் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலயங்களில் சிக்கிக் கொண்டுள்ள மயிலிட்டி போன்ற கடற்றொழில் கிராமங்களில் மீளக்குறியேற்றம் எந்தக்காலத்தில் இடம் பெறுமோ? ஏன்ற தவிப்பில் மக்கள் ஏங்கியிருக்கையில் உயர் பாதுகாப்பு வலயங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுவருவதாகவும் இப்பகுதிகளில் இருந்த மக்கள் நிதந்தரமாக வெளிறேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான காணிகள் பிறிதொரு இடத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக கடற்பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகையில்,
தரைப் பகுதியில் ஆங்காங்கே வர்த்தக நிலையங்களும், புதிய குடிமனைகளும், புது குடித்தனங்களும் என நாளாந்தம் இடம் பெறுகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நேயாளர்களில் 30 வீதமானோர் சிங்களவர்கள் என வைத்தியர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் வர்த்தக நடவடிக்கையிலும் சாதாரன தொழில்களிலும் சிங்களவர்களின் ஆதிக்கம் வடக்கு கிழக்குகளில் அதிகரித்துள்ளதாகவும் இதனால் தமிழர்களின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் கூறப்டுகின்றது.
இப்படியான நடைமுறை சிக்கலுக்குள் சாதாரன தமிழ் மக்கள் சிக்கித்தவிக்கும் சூழ்நிலையில் புலம் பெயர் தேசத்து தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் விந்தையாக உள்ளது. இந் நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் எதை பிடித்து தொங்குவது எதில் தொடங்குவது என குழம்பிபோயுள்ளனர்.
தமிழ் அரசியல் தலைமைகளுக்கு குழப்பதை;தையும் ஸ்ரீலங்கா அரசிற்கு சக்கியையும் கொடுப்பதில் பெரும்பங்காற்றுவது புலம் பெயர் தமிழ் சமூகமே.
இறுதிக்கட்ட போர் நிலைமைகளை நன்கு உணர்ந்திருந்த நிலையிலும் எதே சிறிய காரணங்களுக்காக (மக்களின் விடுதலையை மறந்து) பிளவுபட்டமையே வடக்கு கிழக்கில் இன்று நடைபெறும் இன அழிப்பாகும்.
பெயருக்கே தமிழீழம் என்ற போர்கொடியை தூக்கினார்கள் என்று அவ்வப்போது எதிர் எதிர் இணையங்களில் வெளியாகும் தவகல்கள் கூறுகின்றன.
லட்சக்கணக்கான மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை தாங்கிக்கொண்டு உலகமெங்கும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்து போது, ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சு பொறுப்பற்ற விதத்தில் மக்களின் உணர்வுகளை பாதித்து வன்முறையை தூண்டக்கூடிய விதமாக, முகமறைப்பு துணியினால் நிர்வாண உடலை மூடி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலம் என்று கூறி, (சம்பவம் உண்மையோ பொய்யோ) அவமானபடுத்தி வெளியிட்டிருந்த படத்திற்கெதிராக குரல் கொடுக்க தவறிவிட்டனர்.
மாறாக அச் செய்திக்கு எதிரான நிறுவுதலை தேடிக்கொண்டிருந்தனர். இங்கே முழுப்பலவீனமும் வெளிப்பட ஆரம்பித்து விட்டது இந்த குத்து வெட்டுகள் அரசாங்கத்திற்கு நம்பிக்கையையும் தையரியத்தையம் அளித்துக் கொண்டிருக்கின்றது.
இன்று வரை தமிழர்களுக்கான ஒற்றுமையை குழப்பிவிடுவது தான் சரியான வழியென தமிழருக்கெதிரான சதியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
சதியால் மேற்கொள்ளப்பட்ட இவ் யுத்தத்தை வெற்றி கொள்ள மதியிருந்தும் குறுகிய வட்டம் மதியை துஸ்பிரயோகப்படுத்தியுள்ளது.
மேற் கூறிய பந்திகளின் சுருக்கம் என்னவென்றால். இப்படித்தான் நடக்கும் இது தான் முடிவு என்று சம்பந்தப்பட்டவர்கள் விளங்கியும் அசமந்தமாக நடந்திருக்கின்றனர். அதாவது தமது சுயநலன்களை முன்நிறுத்தி காட்டிக் கொடுப்புக்களையும், சுரண்டல்களையும் செய்திருக்கின்றனர் என்பதை கடந்த 15 மாத கால இணையத்தள போர் ஊடாக அறிய முடிகின்றது.
ஆக காட்டிக் கொடுப்பினால் மிகவும் நிர்க்கதியான தமிழினத்தை மீட்க இனியாராலும் முடியாது. அல்லது தலைவர் பிரபாகரன் தான் மீண்டும் களத்தில் இறங்கினாலும் மகிந்த சொற்படி தான் போராட்டம் நடத்த வேண்டும் என்ற சூழ்நிலை வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. கட்டுக் கதைகளுக்கு தலையாட்டாமல் ஒவ்வொரு தமிழரும் சிந்திக்க வேண்டும்.
போர்க்குற்றங்களிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கும் ஸ்ரீலங்கா பல அரசியல் நாடகங்களை நடத்துகின்றது, இதற்கு மேலாக மிகவும் அந்நியோன்யமாக இராணுவத்தினர் தமிழ் மக்களுடன் பழகி ஸ்ரீலங்கா இராணவத்திற்கெதிரான தமிழ் மக்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அத்துடன் பல தகவல்களையும் பெற்றுக் கொண்டுமிருக்கின்றனர்.
இவ்வளவு காரியங்களையும் மிகக் கச்சிதமாக சாதித்துக் கொண்டு தமிழர்களின் பூர்வீகங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா அரசை எதிர்க்காமல் மௌனிகளாய் தமிழர்கள் உள்ளனர்.
தமிழர் பிரச்சனை பொழுது போக்கிற்கு கதைக்கும் விடயமல்ல. புலம் பெயர் தமிழர்களில் சிலர் தமிழர் பிரச்சனைகளை  பற்றி உரையாடுவது பொழுது போக்கு அம்சமாக கருதுகின்றனர்.
இவ் திட்டமிட்ட இன அழிப்பிற்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய இத் தருணத்தில் தமிழர்கள் தமக்குள் அடிபடுவது அவசியம்தானா?
மேலும் தமிழ் இனம் தனக்குள் தானே பிளவுபட்டு குடுமிசண்டை என்ற நிலையை உருவாக்கி கேவலப்படுத்தி சின்னாபின்னமாக்கும் முயற்சியில் சதியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா அரசானது தனது பகடைக்காய்களாக பிளவுபட்ட புலிகளை அனுகிவருகின்றனர். இதற்காக கே.பி, கேஸ்ரோ ஆகியோரை தற்போது வெளிப்படையாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
அவர்கள் அரசாங்கத்தை சார்ந்தவர்களோ? சாராதவர்களோ? எவராயிருந்தாலும் அவர்கள் தொடர்பான தகவல்களை அரசு வெளியிடுவதால் தமிழர்கள் தமக்குள் தாமே மோதி பிரிந்து இருப்பது தான் தமது சக்தி என்று சதியாளர்கள் போடும் கணக்கை புலம் பெயர் ஈழ ஆதரவாளர்கள் மெய்யாக்ககிறார்கள்.
களத்தில் பட்டறிவுடன் நிற்கும் தமிழர்கள் தலைகுனிவுடன் நிற்பதற்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது.
அரச தரப்பு சிக்கலில் மாட்டியுள்ளது என்று குதுகலிக்கும் சிலர், தமிழர்கள் மீண்டும் ஒன்றுபட்டால் இலங்கையின் போர்குற்ற விசாரனைக்கு விடுதலைப் புலிகள் சார்பில் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றும் அதனால் தான் தற்போது அதை கைவிட்டிருக்கிறார்கள் என்றும் காரணம் கூறுகின்றனர்.
இப்படியான விசாரனைகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்ற ஞானம் முதலில் இருந்திருந்தால் அதற்கேற்ற நகர்வுகளையல்லவா செய்திருந்திருக்க வேண்டும். அப்படி ஒரு விசாரனையை எதிர்கொண்டு போர் குற்றங்களை நிருபிக்ககூடிய சாந்தப்பங்களையோ அல்லது நியாயப்படுத்தக்கூடிய சர்ந்தப்பங்களையே கைவிடுவது வரலாற்றில் விடும் தவறு என்பதிலும் துரோகம் என்பது தான் அதிகம்.
போர்குற்ற விசாரனைகள் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக்களையெடுப்பதாக அமையலாம் ஆனாலும் போராட்டத்தின் நியாயத்தை வெளிக்கெணரப்பட வேண்டிய சர்ந்தப்பம் வீணாக்கப்பட உள்ளது. மேலும் ஸ்ரீலங்கா அரசு போருக்கான நியாயத்தை கூறி எஞ்சியுள் அப்பாவிகளையும் குற்றவாளியாக்க எத்தனிப்பதுடன் தேவைப்படுமிடத்து கொலைகளையோ மனித உரிமை மீறல்களை புரிந்து தப்பித்து கொள்ள பார்க்கின்றது. இதற்கு நிகராக எதிர்ப்பை காட்ட வேண்டிய அவசியமும் தற்போது தமிழருக்கு தான் அதிகம். ஆனால் அந்த இடத்தை தற்போது சிங்கள பயங்கரவாதிகள் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
விடுதலை என்பது புலம் பெயர் தேசத்து தமிழர்களுக்கு அவசியமில்லை என்பதை அவர்களின் அசமந்த போக்கு தெளிவாக காண்பிக்கின்றது. விடுதலை வேண்டி இரவும் பகலும் கண்ணீரால் தோய்கிறவர்கள் ஈழத்தின் அப்பாவி தமிழர்களே.
காணாமல் போனோரை தேடுவோரும், கடத்தப்பட்டவரை விடுவிக்க படி ஏறி இறங்குவோரும், கொல்லப்பட்டவர்களின் கல்லறையை எட்டிப்பார்க்க முடியாதவர்களும் தயாகத்தில் தான் இருக்கிறார்கள். மேலும் ஊனமுற்ற உடம்புடனும் வெடிக்காமல் மிச்சம் மீதியாக உள்ள பூமியில் தினம் தினம் அஞ்சி வாழ்பவர்களும், கொல்லப்பட்ட மருத்துவமாது தர் ஷpகா போன்ற நிலையில் வாழ்வோரும் தாயகத்தில் தான் உள்ளனர் அவர்கள் தான் யுத்தத்தின் வலியை இன்றுவரையும் அனுபவிக்கிறவர்கள் அவர்களுக்கு தான் விடுதலை அவசியம். புலம் பெயர் தேசத்திலிருந்து கொண்டு விடுதலையைப்பற்றி ஆழ்மனதில் கவலைப்படுபவர்களை இனம் காண்பது எளிதான விடயமல்ல.
புலம்பெயர் தேசத்திலிருப்பவர்களின் அரசியல் நகர்வுகள் தாயகத்தில் இருப்பவர்களுக்கான வலி நிவாரணியாய் இருக்கவேண்டும் அல்லது தத்தமது நாடுகளுக்கானதாக அமையலாம். ஆனால் தாயகத்து வலிகளை தூக்கிசுமந்து கொண்டு தமக்கு பின்னால் தான் தாயகத்து மக்களும், அரசியல் வாதிகளும் நிற்கவேண்டும் என்று கூறுவது ஏற்கமுடியாதது.
புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் கிடைக்கப்பெற்றுள்ள வசதிகளையும் வாய்ப்புக்களையும் உதறித்தள்ளிவிட்டு நாட்டுக்கு திரும்புவோம் என்று உதட்டளவில் கூறும் இவர்கள் மனச்சாட்சியின் படி சிந்திக்க வேண்டும்.

0 Responses to “யாருக்கு விடுதலை வேண்டும்?”



  1. Leave a Comment

Leave a comment


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

July 2010
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Flickr My Photos